வேட்டைக்காரன்… எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் பெயரில் வெளிவர இருக்கும் தற்கால எம்.ஜி.ஆர், அடுத்த தளபதி விஜய் ‘நடிப்பில்’ வெளிவர இருக்கும் அதிரடி திரைப்படம்.


நானும் அப்படியே ஆர்வமிகுதியில் ஒட்டிக்கொண்டு படத்தை பார்த்துவிட்டேன். என்னுடன் அப்படியே ஒரு இருநூறு பேர் பார்த்தனர். அவர்களுடன் ஒரு இரண்டாயிரம் பேர் பார்த்தனர். இது மக்களுக்கு படத்தின் மீதுள்ள ஆர்வத்தையே காட்டியது.
வழக்கமாய் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கெட்டப் போட்டு மேக்கப்பிலும், நடிப்பிலும் வித்தியாசம் காட்டும் விஜய் இந்தப்படத்தில் தனது இயல்பான முகத்தில் நான்கு நாள் மீசை தாடியுடன் நடித்துள்ளார். ‘மதுர’ திரைப்படத்தில் கர்சீப்பை காலிலும், ‘போக்கிரி’யில் கையிலும் கட்டி கெட்டப் மாற்றி நடித்திருந்த விஜய் இந்தப் படத்தில் கர்சீப்பை தலையில் கட்டி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்!
கதை என்னவென்றால், விஜய் உழைத்துதான் ‘உணவு’ உண்ண வேண்டும் என்ற கொள்கை கொண்ட இளைஞர். ஆனால் தற்சமயம் வேலையில்லாமல் இருக்கும் காரணத்தால் ஓசியில் ‘டீ’ மட்டுமே குடித்து வாழ்கிறார்.
இதவரையில் விஜய் படங்களில் நாம் பார்த்திராத (கேட்டிராத) அறிமுகப் பாடல் இப்படத்தில் உண்டு. ‘டண்டனக்கு டண்டணக்கு’ என்பதற்கு பதிலாக ‘டண்டானக்கு டண்டாணக்கு’ என மிகவும் புதிதாக இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
“நீ அடிச்சா தான் மாஸ்.. நான் கடிச்சாலே மாஸ்” போன்ற பஞ்ச் டயலாக்குகளுடன் தொடங்கிய படம், காமடியன் சத்யனுடன் சில நகைச்சுவைகள், பின் உள்ளூர் தாதாவின் கடையடைப்பை எதிர்த்து அவர்களை துவம்சம் பண்ணுதல், பின் ஊர்காரர்கள் இவருக்கு ஆரத்தி எடுத்தல் என்பது போன்ற படு வித்தியாசமான காட்சிகளுடன் கதை விர்ர்ர்ர்ர்ரென நகர்கிறது.
இந்நிலையில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பஸ் ஸ்டாப்பில் அனுஷ்காவை சந்திக்கிறார் விஜய்.
அனுஷ்காவின் பாவாடை ஓரமாக கிழிந்துள்ளதைக் கண்டு அனுஷ்காவை தெருவில் வைத்தே திட்டி தீர்க்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் இதனால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது பற்றியும், ஓபாமாவின் வீட்டு நாய்க்கு இதனால் எப்படி வயித்துப்போக்கு ஏற்பட்டது எனவும், மிகவும் காட்டமாகவும், தீவிரமாகவும் விளக்குகிறார்.
தனது வலது கையை மார்பு வரையில் மல்லாக்க உயர்த்தி, “கிழிஞ்சாதான் பாவாட.. கிழியலேனா மானாட மயிலாட” என்று ‘அர்த்தத்துடன்’ பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
அனுஷ்காவை கிழிந்த பாவாடையை தைக்கும் படி திட்டிவிட்டு, பின் தன் வீட்டில் தனது கிழிந்த ட்ரவுசரைப் பார்த்து அழுகும் காட்சியில் விஜய் பின்னியிருக்கிறார். அழுது கொண்டே ஸ்விட்சர்லாந்தில் ஒரு குத்துப் பாட்டு பாடுகிறார். இதற்கு நடுவில் அனுஷ்கா பாவாடையை மாற்றியவுடன் ஒரு குத்துப் பாடல் வருகிறது. (இந்தப் பாடலில் அனுஷ்காவின் உடைக்கு முதலில் போட்டிருந்த கிழிந்த பாவாடையே பரவாயில்லையென ரசிகர்கள் முணுமுணுத்தது கேட்டது!).
இந்தக் கட்டத்தில் தான் கதையில் யாருமே எதிர்பாராத திருப்பம் வருகிறது, அதாவது அனுஷ்காவுக்கு விஜய் மேல் காதல் பிறக்கிறது. ஆனால் விதியோ சதி செய்கிறது!! “யாருமே பார்க்காத அந்த பாவாடை கிழிசலை நீ எப்படி பார்த்த? நீ பார்த்துதொலைச்சது மட்டுமல்லாமல் ஊரையெல்லாம் கூட்டி என் தங்கச்சியோட மானத்தை வாங்கிவிட்டியேடா!!” என கத்திக்கொண்டே அனுஷ்காவின் அண்ணன் திரையில் நுழையும் சமயம் இடைவேளை வந்து விடுகிறது.
ஓரமாய் பாவாடை கிழிந்ததற்காக ஆத்திரத்தில் கத்திய விஜய், குத்துப் பாடல்களில் பாவாடையே போடாமல் ஆடும் அனுஷ்காவை ஒன்றுமே சொல்லாதது பெண் ரசிகைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்துப் பாட்டு முடிந்தவுடன் விஜயின் முதுகில் கத்தியால் ஒரு குத்து விழுகிறது. திரும்பிப் பார்த்தால் தன்னுடன் ஒரு காலத்தில் கபடி விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டனும், அனுஷ்காவின் அண்ணனும் நிற்கிறார்கள்.
தங்கள் குத்தவில்லையென்றும், இயக்குனர்தான் விஜய் செய்யும் அலும்பு தாங்காமல் குத்தச் சொன்னார் எனவும் அவர்கள் எவ்வளோ முறை கெஞ்சியும் விஜய் அவர்களை மன்னிக்காமல் ஊரே அதிரும்படி கர்ஜிக்கிறார். பின் குத்துப்பட்ட காயம் ஆறுவதற்குள் அனுஷ்காவை திருமணம் செய்து காட்டுவதாக சபதம் எடுக்கிறார் விஜய்.
பின்பாதி படத்தில் முதுகில் ரத்தம் சொட்டியபடியே மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். விஜய்யின் வேதனையை பொறுக்க முடியாத நண்பர் சத்யன், விஜய்யின் ரத்த காயத்தில் ‘M-Seal’ பூசி அடைக்க வரும் சமயத்தில், விஜய் அவரை தடுத்து, உழைப்பின் உன்னதத்தை பற்றி, நமீதாவுடன் ஒரு ரீமிக்ஸ் பாடல் பாடுகிறார்.
“ஏன்டா இவன் சம்பந்தமில்லாம பாடுறான்?” என்ற குழப்பத்தில் அழுதுகொண்டே சத்யன் வெளியேரும் போது நம் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. வில்லனின் சதியால்(??!!!) நண்பனை இழந்த ஆத்திரத்தில், தான் செய்த சபதம் கடைசி சீனில் நினைவுக்கு வர, வெறிகொண்ட வேங்கையென எதிரிகளை ‘வேட்டையாடப்’ புறப்படுகிறார் வேட்டைக்காரன் விஜய்.
வில்லனை வீழ்த்தினாரா?
பஞ்சாப் கேப்டன் அனுஷ்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு தலை காதல் என்ன ஆனது
?சபதத்தில் விஜய் ஜெயித்தாரா?
முதுகில் ரத்தம் நின்றதா?
சத்யன் என்ன ஆனார்?
ஆடியோ கேசட்டில் இருக்கும் இன்னும் ஒரு குத்துபாடல் எப்போது வரும்?போன்ற பல விஷயங்களுக்கு அழகாக விடை சொல்கிறது இந்த வேட்டைக்காரன்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய விஜயின் வித்தியாசமான படங்களின் வரிசையில், மற்றுமொரு வைரம்தான், இந்த வேட்டைக்காரன். வேட்டைக்காரன் வெல்வான்
No comments:
Post a Comment